Tuesday, February 4, 2014

கனவு இல்லம்!






அழகான ,அமைதியான இல்லம் ...

சுற்றிலும் மரங்கள்....இல்லை இல்லை 
என் வரங்கள்!
மரங்களுக்கிடையில் பூக்களின் வாசம்
ஒரு சின்ன குளம்,
குளம் நிறைந்த மீன்கள்...இல்லை இல்லை 
எந்தன் கண்கள்!

வீட்டின் வளாகம்
விண்ணைத்தொட்ட அனுபவம்!

உள்ளே செல்வோமா?!
சொர்க்கத்துக்குள் நுழைந்த மாதிரி...

கலைமுழுதும் கதவின் வடிவில்!
பளிச்சென்று உள்ளே...
அளவான முகப்பு அறை ...வரவேற்பறை...
அழகிய என் ஓவியம் கண்களைத்தீண்ட...

மெல்ல என் அறையினுள் 
மகிழ்வுடன் நுழைகிறேன்
ஆமாம்...என் எண்ணங்களை 
வண்ணங்களில் தொலைக்க
ஏதுவாக அமையுமிடம்...
வெளிச்சமான அறையில்
வண்ணக்கலவைகள்,விருப்பமான தூரிகைகள்...
எண்ணிலடங்காமல் 
அழகாய் அடுக்கி வைக்கப்பட்டது!
வரைந்ததும்  வரையப் போவதுமாக ....
என்னுலகம்!

அட 
என்னவரின் அறையினை 
பார்க்க வேண்டுமே....
மெல்லிய இசையினால் 
நிறைந்திருக்க
எங்கு திரும்பினாலும் இசைத்தட்டுகள்...
இன்னிசையில் மயங்கி 
உள்ளம் கவர் என் கள்வன்
உறைந்திருக்க...

ம்ம்ம்...இருவரும் நேசிக்கும்
 இன்னுமொரு உலகம்...
முறையாக அடுக்கப்பட்ட நூல்கள்
வசதியாக வாசிக்க அமர்விடம்.
தமிழில் நிறைந்த நூற்பாலை.
இந்த அறை
எங்கள் சிந்தனைக்கு மரியாதை!

ம்ம்ம்....
‘செவிக்குணாவில்லாத போது சிறிது
 வயிற்றுக்கும் ஈயப்படும்’-
படித்திருக்கேனே....!

என் சமையலறை...ம்ஹும்,
எங்கள் சமையலறை...
இல்லையா பின்னே??!!
தேநீர் அவர் போட்டு கொடுத்து
 நான் அருந்தும் சுகமே தனி!
இங்கே...
காற்றோட்டம்,வெளிச்சம்,சுத்தம்
வேறென்ன வேண்டும்?!

படுக்கையறை-இணைப்புப் பாலம்
 மெல்லிய வண்ணதிரைச்சீலை
வசமிழக்கும் வண்ணத்தில் விரிப்பு
வசதியாய் தலையணை
எங்கள் விருப்பு,வெறுப்பு சமமாகி
கண்களும் மனமும் அமைதியுரும்
யோகக்கூடம்!

இதோ காலை எழுந்ததும்
மெல்ல தாழ்வாரம் பக்கம் வந்து 
சோம்பல் முறித்தால்
வண்ணப்பறவைகள் பேசுகிறது
பட்டாம்பூச்சிகள்படபடக்கிறது....

இன்னுமா தூக்கம்! அட யார் பேசுறது
பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு எழுந்துரு தாயீ...
அன்பான வேண்டுகோள் !
நிராகரிக்கமுடியுமா?!!
இதோ எழுந்துட்டேங்க!     
                                                                  
                                                                       -தென்றல்